கொடைக்கானல் மோயர் பாயிண்ட் பகுதியில் இயற்கை அழகை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்.
சாரல் மழையுடன் இதமான சீதோஷ்ணம்- கொடைக்கானலில் குவிந்த வெளிமாநில சுற்றுலா பயணிகள்
- மழை காரணமாக வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல், பியர் சோழா அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால் காட்டுத்தீ பற்றி அரிய வகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் கருகி நாசமாகின.
வனத்துறையினர் காட்டத்தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். இருந்த போதும் அவ்வப்போது திடீரென பற்றும் காட்டுத்தீயை அணைப்பது பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த திடீர் மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இதனால் வனத்துறையினர் நிம்மதியடைந்தனர். மழை காரணமாக வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல், பியர் சோழா அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்தது. குறிப்பாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவு கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் வந்திருந்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர், சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தவாரே தரையிறங்கிய மேக கூட்டத்தை உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது தமிழகத்தில் அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாத மத்தியில் கோடை விடுமுறை தொடங்கும் என்பதால் அப்போது சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.