தமிழ்நாடு

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடைமுறை அமல்

Update: 2022-07-06 06:04 GMT
  • முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • மெரினா உள்ளிட்ட சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளிலும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை:

சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் 1060 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகவே பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கியும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கடைத்தெருக்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் இன்று தொடங்கியது.

சென்னையில் 200 வார்டுகள் உள்ளன. இந்த 200 வார்டுகளிலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இன்று காலை முதல் பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மத வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்றும் கண்காணித்தனர்.

மேலும் பஸ்களில் வரும் பயணிகள் முககவசம் அணிந்துள்ளார்களா, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மெரினா உள்ளிட்ட சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளிலும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

இதுதொடர்பாக சுகாதார நல அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் கூறியதாவது:-

முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் இன்று காலை முதலே சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் முககவசம் அணியாதவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பொது இடங்களுக்கு மக்கள் காலையில் குறைவாகவே வருவார்கள். பிற்பகலுக்கு பிறகே பொது இடங்களில் அவர்கள் கூடுவார்கள். எனவே அவர்கள் முககவசம் அணியாவிட்டால் உடனடியாக ரூ.500 அபராதம் விதித்து அதற்கான ரசீதையும் உடனே அவர்களிடம் வழங்குவார்கள். கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை மார்க்கெட், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தியேட்டர், வணிகவளாகம், தங்கசாலையில் உள்ள தியேட்டர், ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் இன்று காலையிலேயே சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

திருவொற்றியூரில் தேரடி பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், திருவொற்றியூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இன்று முதல் நாள் என்பதால் பல இடங்களில் பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினார்கள்.

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜார், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைத்தெருக்கள் வணிக வளாகங்களில் அதிகாரிகள் இன்று காலை முதலே கண்காணித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் சென்னை கோயம்பேடு பஸ்நிலையம், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளிலும் அதிகாரிகள் இன்று காலை முதலே கண்காணித்து வருகிறார்கள்.

பரங்கிமலை சுரங்கப்பாதை, ஆலந்தூர் காய்கறி மார்க்கெட், ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உள்ள வணிக வளாகம், மேற்கு கரிகாலன் தெரு-புளுபைக் சந்திப்பு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் நடவடிக்கைகளில் இறங்கினார்.

மேலும் இன்று அபராதம் விதிக்கும் நடைமுறைகள் தொடங்கி இருப்பதால் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து 'முககவசம் அணியுங்கள் அல்லது ரூ.500 அபராதம் கட்ட வேண்டும்' என்றும் எச்சரித்தனர். இந்த அறிவிப்பை கேட்டதும் பொதுமக்கள் முககவசம் அணிந்தனர்.

Tags:    

Similar News