தமிழ்நாடு செய்திகள்

வாலிபரிடம் ரூ.9¼ லட்சம் பறிப்பு: கத்திமுனையில் மர்ம நபர்கள் துணிகரம்

Published On 2023-09-14 10:55 IST   |   Update On 2023-09-14 10:55:00 IST
  • பணத்தை பறித்து சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள காஞ்சிபட்டியை சேர்ந்தவர் அற்புத அருண். இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கத்தை ஒரு பெட்டியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சிவகங்கைக்கு புறப்பட்டார். வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் அற்புத அருணை பின்தொடர்ந்தனர்.

சிவகங்கை அருகே கண்டனிப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அற்புற அருணை சுற்றிவளைத்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர்.

அற்புத அருணை சரமாரியாக தாக்கிய அந்த கும்பல் அவர் வைத்திருந்த பெட்டியை கத்திமுனையில் பறித்தனர். பெட்டியை திறந்த அந்த கும்பல் அதில் பணம் இருப்பதை உறுதி செய்தபின் ரூ.9 லட்சத்து 30 ஆயிரத்துடன் அற்புத அருணின் மோட்டார் சைக்கிளையும் பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்து அற்புத அருண் காளையார் கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை பறித்து சென்ற கும்பல் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து அந்த கும்பலை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அற்புத அருணுக்கு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் எப்படி கிடைத்தது எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கையில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கையில் கடந்த சில மாதங்களாக கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தனியாக செல்லும் முதியவர்கள், பெண்களை குறி வைத்து சமூக விரோதிகள் நகை, பணம் பறிப்பில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக நகர் பகுதி போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது பூட்டியிருக்கும் வீடுகளிலும் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டுவது அதிகரித்து வருகிறது. கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மோதல், கொலை, கொள்ளை, வழிப்பறி அதிகரித்துள்ளது. இதனை போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News