தமிழ்நாடு

சிவகாசி அருகே நள்ளிரவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர்

Published On 2023-03-19 06:08 GMT   |   Update On 2023-03-19 06:08 GMT
  • அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது.
  • பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

 சிவகாசி:

தமிழகத்தில் பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்றது சிவகாசி. இங்கு ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இங்கு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுகள் மேற்கொண்ட போதிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுள்ளது . இது பற்றிய விவரம் வருமாறு;

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாராயணபுரம் உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இரவு தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் பட்டாசு ஆலையில் நள்ளிரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த ஒரு அறை முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கிழக்கு போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்துக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News