வெறிச்சோடி காணப்பட்ட பன்னீர்செல்வம் பூங்கா பகுதி.
திரும்பும் திசையெல்லாம் பிரியாணி, பணம், பரிசு மழை- திருவிழா கோலமாக இருந்த ஈரோடு கிழக்கு வெறிச்சோடியது
- தமிழகத்தில் எத்தனை இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்தாலும், அரசியல் கட்சியினர் மத்தியில் பிரபலமாக பேசப்படுவது திருமங்கலம் பார்முலா தான்.
- கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த சாலைகள் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக 18-ந் தேதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. எம்.எல்.ஏ. இறந்த 14-வது நாளிலேயே தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எந்த கட்சியினருமே எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தேர்தல் வந்து விட்டது என்பதால் அனைத்து கட்சியினரும் போட்டியிட வேண்டிய நிலை உருவானது.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவினரும் நியமிக்கப்பட்டனர். இதே போல் அ.தி.மு.க. சார்பிலும் தேர்தல் பணிக்குழு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. சார்பிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. உள்பட 77 பேர் போட்டியிட்டாலும் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ்-அ.தி.மு.க.வுக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் ஆட்சிக்கு நற்சான்றிதழாக இந்த தொகுதியில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்போடு தி.மு.க.வும், வருகிற பாராளுமன்ற தேர்தல் முன்னோட்டாக இந்த தேர்தல் வெற்றி அமைய வேண்டும் என்ற முனைப்போடு அ.தி.மு.க.வினரும் தேர்தல் களப்பணியாற்றினர்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் ஈரோட்டில் குவிய தொடங்கினர். அவர்களுக்கு உள்ளூர் கட்சிகாரர்கள் தங்கும் விடுதிகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஈரோட்டையொட்டி உள்ள பண்ணை வீடுகள், தோட்டத்து வீடுகளை வாடகைக்கு எடுத்து கொடுத்தனர். இதில் 25 நாட்களுக்கு குறைந்தது ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகையாக கொடுக்கப்பட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் முதலில் பயன் அடைந்தது வீட்டு உரிமையாளர்கள் தான். முதலில் தொகுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்தனர். இதனால் வாக்காளர்கள் பெரிதாக அரசியல் கட்சியினரை கண்டு கொள்ளவில்லை. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 10-ந் தேதி வெளியானது. அன்று முதலே அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் குதித்தனர்.
ஒரு பொறுப்பாளருக்கு 100 ஓட்டுகள் ஒதுக்கப்பட்டு தேர்தல் பணியாற்றி வந்தனர். இதனால் குறிப்பிட்ட பொறுப்பாளர் தலைமையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு வரும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை பொதுமக்கள் வரவேற்கும் வகையில் அவர்களுக்கு சில்வர் குடம், சேலை, ரூ.500 வழங்கப்பட்டது. இதே போல் 2 முக்கிய அரசியல் கட்சியினரும் மாறி மாறி மக்களை கவனித்தனர். இதனால் வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு மக்கள் பிரசார தொழிலுக்கு மாறிவிட்டனர்.
இதையடுத்து ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் புதுபுது வகையில் பிரசார வியூகத்தை வகுத்தனர். இதில் ஒரு அரசியல் கட்சியின் பிரசாரம் அனைத்து கட்சியினரையும் கதிகலங்க வைத்தது.
தமிழகத்தில் எத்தனை இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்தாலும், அரசியல் கட்சியினர் மத்தியில் பிரபலமாக பேசப்படுவது திருமங்கலம் பார்முலா தான். அந்த பார்முலாவையே பின்னுக்கு தள்ளிவிட்டது இந்த ஈரோடு இடைத்தேர்தல் பார்முலா. பொதுமக்கள் பிரசாரம் செய்யவேண்டாம். அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் பணிமனைகளில் காலையில் இருந்து இரவு 10 மணி வரை அமர்ந்துஇருந்தாலே போதும் ரூ.500-ம் பிரியாணியும் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு கூடுதலாக ஒரு மதுபாட்டிலும் கொடுக்கப்பட்டது. வாக்காளர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தேர்தல் பணிமனையில் அமர்ந்து கொண்டதால் பிரசாரம் செய்ய முடியாமல் மற்ற அனைத்து கட்சி வேட்பாளர்களும் கதிகலங்கினார்கள்.
அதோடு இல்லாமல் பவானி கூடுதுறை, சென்னிமலை, திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலுக்கும் சொகுசு பஸ்களில் வாக்காளர்களை அழைத்து சென்றனர். அவர்களுக்கு 3 வேளை உணவுடன் ரூ.750 முதல் ரூ. 1000 வரை பணமும் கொடுக்கப்பட்டது. அரசியல் கட்சியினர் நல்ல முறையில் தினமும் கவனிப்பதால் பொதுமக்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ஒரு கட்டத்தில் 2 அரசியல் கட்சி பிரசாரத்துக்குமே வாக்காளர்கள் செல்ல தொடங்கி விட்டனர். இதனால் காலையில் ரூ.500, மாலையில் ரூ.500 என தினமும் ரூ. 1000 வரை சம்பாதித்தனர்.
நாள் முழுவதும் உழைத்தாலும் ரூ. 350-க்கு மேல் கூலி கிடைக்காத நிலையில் காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேர பிரசாரத்துக்கு ரூ.1000 கிடைப்பதால் பொதுமக்கள் இடைத்தேர்தலை உற்சாகமாக கொண்டாட தொடங்கினர். அது மட்டுமின்றி திரும்பும் திசையெல்லாம் காதணி விழா என்ற பெயரில் வாக்காளர்களுக்கு மெகா பிரியாணி விருந்தும் நடத்தப்பட்டு வந்தது. சிக்கன், மட்டன் கறி, மளிகை பொருட்களும் வழங்க தொடங்கினர். பின்னர் சேலை, வேட்டி, சட்டையும் வழங்கினர். உண்ண உணவு, உடுக்க உடை, செலவுக்கு பணம் கிடைத்ததால் வாக்காளர்கள் பிரசாரத்துக்கு எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கினர். அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு அழைக்காவிட்டாலும் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் பகுதியில் உள்ள அரசியல் கட்சியினரிடம் அண்ணே... இன்று பிரசாரம் உள்ளதா? என்று கேட்க தொடங்கி விட்டனர்.
பிரசாரம் இறுதி கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்களுக்கு கவனிப்புகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. முதலில் குக்கர், தொடர்ந்து பட்டுபுடவை, வெள்ளி கால் கொலுசு, வேட்டி, சட்டை, வெள்ளி கிண்ணம், ஆகியவை வழங்கப்பட்டது. இதில் சேலை கலர் பிடிக்காமல் அரசியல் கட்சியினரிடம் பெண்கள் வாக்குவாதமும் செய்து உள்ளனர். சில பெண்கள் சேலைக்கு பதிலாக பணமும் கேட்டு வாங்கி கொண்டனர். பின்னர் ஓட்டுக்கு 2 அரசியல் கட்சியினரிடம் இருந்து 5000 ரூபாயும் மொத்தமாக கிடைத்தது. இவ்வளவு கிடைத்தும் இன்னும் ஏதாவது கிடைக்குமா? என்ற எதிர்பார்பில் வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 20 நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முத்த நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் சர்வ சாதாரணமாக சின்ன சின்ன தெருக்களில் கார்களில் சென்றும், நடந்து சென்றும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர். பொதுமக்களும் அரசியல்வாதிகளுடன் செல்பியும் எடுத்து கொண்டனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் வெளியூர்களில் இருந்து ஈரோட்டிற்கு வந்து இருந்ததால் ஈரோடு மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது. சில பள்ளிகளில் பள்ளிகளை முன்கூட்டியே ஒரு மணி நேரத்துக்கு முன்பே விட்டனர். அரசியல் கட்சியினர் வருகையால் ஈரோடு கிழக்கில் உள்ள ஓட்டல்கள், கறிகடைகள், சலூன் கடைகள், மதுக்கடைகள், டீ கடைகள், பேக்கரிகள் என எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது.
மேலும் நகரின் பல்வேறு இடங்களிலும் விலை உயர்ந்த சொகுசு கார்களின் அணிவகுப்பாக இருந்தது. சிறிய சிறிய தெருக்களில் கூட கார்கள் அணிவகுத்து நின்றது.
நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இறுதி கட்ட பிரசாரம் செய்தனர். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தி.மு.க.-அ.தி.மு.க. தொண்டர்கள் நேற்று கார்களில் அணிவகுத்து வந்தனர். இதனால் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்ததால் வெளியூர் அரசியல்வாதிகள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. அதன்படி வெளியூர் அரசியல் கட்சியினர் தாங்கள் தங்கிய அறைகளை காலி செய்து விட்டு நேற்று மாலை சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால் ஈரோடு-சேலம் சாலையில் கடுமையான போக்குவத்து நெரிசல் ஏற்பட்டது.
வெளியூர் அரசியல்வாதிகள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டதால் ஈரோடு மாநகரம் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த சாலைகள் ஆள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. கடந்த 20 நாட்களாக திருவிழா போல் காணப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி தற்போது வெறிச்சோடியது. கடைகளில் உள்ளூர்காரர்களை தவிர வெளியூர்காரர்கள் யாரும் இல்லை. இதனால் கடந்த 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஈரோடு பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.