தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: இளங்கோவனின் 2-வது மகன் சஞ்சய் சம்பத் போட்டி?

Published On 2023-01-21 09:36 IST   |   Update On 2023-01-21 11:28:00 IST
  • பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கு இந்த தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது.
  • மறைந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கிழக்கு தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை முடிந்த அளவு செய்து கொடுத்து உள்ளார்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த தொகுதியில் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நிறுத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் இளங்கோவனை சந்தித்தும் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினர். ஆனால் தனது மகன் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத அவர் இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தல் என்பதால் ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்றும் மேலும் இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்றும் திட்டமிட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட தயக்கம் காட்டி வருவதால் அவரது 2-வது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக அவர்கள் இளங்கோவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கு இந்த தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. மேலும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கிழக்கு தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை முடிந்த அளவு செய்து கொடுத்து உள்ளார்.

எனவே இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு காங்கிரஸ் மேலிடம் சஞ்சய் சம்பத்தை களம் இறக்க முடிவு செய்து உள்ளது. வேட்புமனுத்தாக்கலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் முறைப்படி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இளங்கோவன் குடும்பத்தில் இருந்து மீண்டும் ஒரு வேட்பாளர் களம் இறக்கப்படுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

Tags:    

Similar News