தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கி உள்ளனரா என போலீசார் சோதனை செய்த காட்சி.

ஈரோடு இடைத்தேர்தல்: விடிய விடிய அதிரடி சோதனை- விடுதிகளில் தங்கி இருந்த கட்சிக்காரர்கள் வெளியேற்றம்

Published On 2023-02-26 12:14 IST   |   Update On 2023-02-26 12:50:00 IST
  • தனியார் விடுதிக்கு சென்ற போலீசார் அங்கு வருகை பதிவில் உள்ள வெளி நபர்கள் விவரங்கள் குறித்து சேகரித்தனர்.
  • எப்போதும் பரபரப்புடன் காணப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி நேற்று மாலை 6 மணிக்கு பிறகு அமைதியானது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதற்கான இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள், வெளி மாவட்ட நிர்வாகிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரோட்டில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள், வெளி மாவட்ட நிர்வாகிகளும் பிரசாரம் மேற்கொண்டனர்.

இதேபோல் தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெளி மாவட்ட நிர்வாகிகளும்ஏராளமானோர் ஈரோட்டில் முகாமிட்டு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து தனியார் விடுதிகள், லாட்ஜிகள், தனி வீடுகள், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பண்ணை வீடுகள் அனைத்தும் நிரம்பியது.

கடந்த ஒரு மாதமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் வாகனங்கள் அணிவகுத்து சென்றதை காண முடிந்தது. காலை 6 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அரசியல் கட்சியினர் காலை 11 மணிக்குள் பிரசாரத்தை முடித்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

பின்னர் மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் அரசியல் கட்சியினர் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இதனால் காலை, மாலை நேரங்களில் ஈரோடு மாநகர் பகுதியில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர்.

அரசியல் கட்சியினர் பிரசாரத்திற்கு செல்லும்போது தங்களுடன் அந்தப் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்களையும் அழைத்து சென்றனர். இதற்காக அவர்களுக்கு தனி கவனிப்பும் இருந்தது. இதனால் ஈரோட்டில் கடந்த ஒரு மாதமாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.

இந்நிலையில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதேபோல் தே.மு.தி.க.வினர் மற்றும் சுயேச்சைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி பரபரப்பாக காணப்பட்டது.

எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினர் தலையாகவே தெரிந்தது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இதனையடுத்து தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி வெளி மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவராக கிழக்கு தொகுதியை விட்டு வெளியேறினர். அவர்கள் முழுவதும் தொகுதியை விட்டு வெளியேறி விட்டார்களா? என்பதை கண்காணிக்க போலீஸ் சார்பில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டது.

அவர்கள் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து சென்று ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் உள்ள தனியார் விடுதிகள், லாட்ஜிகள், திருமண மண்டபங்கள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு தங்கி இருந்த அரசியல் கட்சியினரை போலீசார் வெளியேற்றினர். தனியார் விடுதிக்கு சென்ற போலீசார் அங்கு வருகை பதிவில் உள்ள வெளி நபர்கள் விவரங்கள் குறித்து சேகரித்தனர். அதில் எத்தனை பேர் விடுதியில் தங்கி இருந்தனர். தற்போது அனைவரும் வெளியேறி விட்டார்களா? என்று ஆய்வு செய்தனர்.

மேலும் ஒவ்வொரு அறைக்கு சென்றும் வெளிநபர்கள் இருக்கிறார்களா? என்று சோதனை செய்தனர். டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் ஒலிபெருக்கி மூலம் தேர்தல் விதிமுறை காரணமாக வெளிநபர்கள் இனி ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் தங்கக்கூடாது. உடனடியாக வெளியேற வேண்டும். அப்படி வெளியேறவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதேபோல் திருமண மண்டபங்களில் போலீசார் சென்று ஆய்வு செய்தனர். எப்போதும் பரபரப்புடன் காணப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி நேற்று மாலை 6 மணிக்கு பிறகு அமைதியானது. முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. போலீசாருடன் துணை ராணுவத்தினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடுக்கு வரும் வாகனங்களை நிறுத்தி அவர்கள் பெயர், முகவரி, எந்த ஊர், எதற்காக ஈரோட்டுக்கு வருகிறீர்கள், செல்போன் எண்கள் போன்ற விவரங்களை பதிவு செய்து கொண்டனர். மேலும் உடமைகளையும் தீவிர பரிசோதனை செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 12 சோதனை சாவடிகளிலும் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News