கடலூர் பஸ் நிலையம் மாற்றம்: தி.மு.க. அரசை கண்டித்து 6-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
- பேருந்து நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு மனச்சுமையும், பொருளாதார சுமையும், கால விரயமும் ஏற்படும்.
- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
எனது தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின்போது, கடலூர் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 18.26 ஏக்கர் நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், விதிவசத்தால் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த தி.மு.க. அரசு, புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை, சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எம். புதூருக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு மனச்சுமையும், பொருளாதார சுமையும், கால விரயமும் ஏற்படும்.
புதிய பஸ் நிலையத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, கழக ஆட்சியின்போது தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வலியுறுத்தியும்; கடலூர் மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சீர்செய்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. கடலூர் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கடலூர் மாநகராட்சி தலைமை தபால் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.