தொழில்அதிபர் காளியப்பன் வீட்டில் அமலாக்க துறை சோதனை நடந்தபோது மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பரமத்திவேலூரில் அமலாக்க துறை சோதனை நிறைவு: தொழிலதிபர் வீட்டில் இருந்து பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்
- அமலாக்கத்துறை அதிகாரிகள் காளியப்பன் மற்றும் அவரது மகளை பரமத்திவேலூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
- நள்ளிரவு சுமார் 2 மணி வரை அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். இவர் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் தொடர்பில் இருந்தாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
முதல் நாள் மாலை தொடங்கிய சோதனை மறுநாள் காலை வரை நடைபெற்றது. இந்த சோதனையின் அடிப்படையில் வீரா.சாமிநாதனின் உறவினரான நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கார நகர் ராஜாஜி தெருவை சேர்ந்த தொழில் அதிபர் டயர் கடை மணி என்கிற காளியப்பன் வீட்டிற்கு நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.
பின்னர் அவர்கள் காளியப்பனின் வீடு மற்றும் அவரது நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். சோதனையின்போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், வீட்டில் இருந்தவர்களையும் வெளியே செல்ல அமலாக்கத்துறையினர் அனுமதிக்கவில்லை. வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் காளியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுடன் உள்ள தொடர்பு குறித்தும் அவர் ஏதாவது சொத்து, முதலீடு பத்திரங்கள் கொடுத்துள்ளாரா? என்றும் விசாரணை நடத்தினர்.
நேற்று 2வது நாளாகவும் காளியப்பன் வீடு மற்றும் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் காளியப்பன் மற்றும் அவரது மகளை பரமத்திவேலூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
சுமார் 1 மணி நேரம் வங்கியில் விசாரணை நடத்தி விட்டு மீண்டும் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் காளியப்பனின் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய 2 ஊழியர்களிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். பின்னர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வங்கி அலுவலர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் நகை எடை மதிப்பிடும் எந்திரத்துடன் சோதனை நடத்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
நள்ளிரவு சுமார் 2 மணி வரை சோதனை நடைபெற்றது. பின்னர் அமலாக்கதுறை அதிகாரிகள் தொழிலதிபர் காளியப்பன் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் ரொக்க பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலாள சொத்து ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் 3 சூட்கேஸ்களில் எடுத்து சென்றனர்.
இந்த சோதனையின் அடிப்படையில் காளியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.