தமிழ்நாடு

ஊதிய உயர்வு கோரி ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் 16-ந் தேதி பேரணி நடத்த முடிவு

Published On 2023-11-06 06:40 GMT   |   Update On 2023-11-06 06:40 GMT
  • முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
  • அங்கி அணிவகுப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.

சென்னை:

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.செந்தில், பி. பாலகிருஷ்ணன், ஏ.ராமலிங்கம், சி.சுரேந்திரன் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் கடந்த செப்டம்பர் 15-ந் தேதி உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் ஏறத்தாழ 2 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்த அரசாணையை மதிப்பாய்வு செய்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதேநேரத்தில், தற்போதைய அரசு ஊதிய உயர்வுக்காக கொண்டு வந்த அரசாணை 293-ல் சங்கங்கள் கோரிய மாற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை. அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை அரசுக்கு அளித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திய பிறகும், அதன் பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 16-ந் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை முன்வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்துவது என அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றனர்.

Tags:    

Similar News