அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாமக்கல்லில் நாளை தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்
- ஈரோட்டில் இருந்து கார் மூலம் நாமக்கல் வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- வெண்ணந்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்க முதலமைச்சர் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையொட்டி அங்கு பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்டத்தின் இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த அருணகிரியின் பெயரில் இங்கு திடல் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது நினைவு கொடிக்கம்பத்தில் அமைச்சர் உதயநிதி கட்சி கொடியேற்ற உள்ளார்.
அதேபோல் கூட்டம் நடைபெறும் பந்தலின் நுழைவுவாயிலுக்கு மறைந்த இளைஞரணி நிர்வாகிகள் உதயகுமார், சுந்தரம் ஆகியோரின் பெயரும், மேடைக்கு மறைந்த நிர்வாகிகள் கண்ணன், மோதில்ராஜ், மணிவேல் ஆகியோரின் பெயரும் சூட்டப்பட்டு உள்ளது.
இதனிடையே ஈரோட்டில் இருந்து கார் மூலம் நாமக்கல் வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கூட்டத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணி அளவில் அவர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, உள்நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்க உள்ளார்.
இதேபோல் வெண்ணந்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்க முதலமைச்சர் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் செல்லும் வழியில் வெண்ணந்தூர் அருகே மலைவாழ் மக்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் முன்னின்று செய்து வருகிறார்கள்.
விழா நடைபெறும் இடத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர் செல்லும் வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.