தமிழ்நாடு

விளவங்கோடு தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க தி.மு.க. முடிவு

Published On 2024-03-14 09:19 GMT   |   Update On 2024-03-14 09:19 GMT
  • கடைசியாக காங்கிரசே அங்கு வெற்றி பெற்றிருந்ததாலும் தொகுதியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
  • காங்கிரசுக்கு தான் தொகுதி என்பது முடிவான நிலையில் அந்த கட்சியின் சார்பில் யார் களம் இறக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், 3 முறை இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

கடந்த சில மாதங்களாக கட்சி தலைமை மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்தார். கட்சி தலைமை பதவி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்காதது குறித்து அதிருப்தியில் இருந்த அவர், சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி, பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

அத்தோடு தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு கடிதமும் எழுதினார். அதனை பெற்றுக்கொண்ட சபா நாயகர், விஜயதரணியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து சட்டசபை செயலகம், விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் அனுப்பியது. எனவே விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவானது. இடைத்தேர்தலை பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.

எனவே பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், விளவங் கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் சேர்ந்து தயாராகி வருகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் அதிகமுறை வெற்றி பெற்றிருப்பதாலும், கடைசியாக காங்கிரசே அங்கு வெற்றி பெற்றிருந்ததாலும் தொகுதியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடமும் வலியுறுத்தி உள்ளது. இதற்கிடையில் விளவங்கோடு தொகுதியில் தி.மு.க. களம் இறங்க வேண்டும் என அக்கட்சியினர் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.எனவே விளவங்கோடு தொகுதியில் களம் இறங்கப் போவது யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தநிலையில் அந்த தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க, தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டிவரும் தி.மு.க., சட்டமன்ற இடைத்தேர்தலில் கவனம் செலுத்த விரும்பவில்லை என்பதாலும், அந்த தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரசுக்கு தான் தொகுதி என்பது முடிவான நிலையில் அந்த கட்சியின் சார்பில் யார் களம் இறக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அங்கு பெண் வேட்பாளரே நிறுத்தப்படுவார் என சமீபத்தில் தொகுதியில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்திருந்தார்.

எனவே குமரி மாவட்ட மகளிர் காங்கிரசார் இடைத்தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில துணைத் தலைவர் ராபர்ட் புரூஸ், ஜவகர் பால்மஞ்ச் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர்.டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சர்மிளா ஏஞ்சல், தாரகை கட்பர்ட் உள்ளிட்ட பலர் தொகுதியில் களம் இறங்க கட்சியின் தலைமையை அணுகி வருகின்றனர்.

இடைத்தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? என்று காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது. இதனால் தற்போதே விளவங்கோடு தொகுதி சூடுபிடித்துள்ளது.

Tags:    

Similar News