கோவளம் அருகே சென்னை டாக்டரின் பண்ணைவீட்டில் காவலாளி சுத்தியலால் அடித்து கொலை
- டாக்டர் ராமலிங்கத்துக்கு சொந்தமான இந்த பங்களாவில் தேசிங் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
- செம்மஞ்சேரியில் உள்ள வீட்டுக்கு எப்போதாவது சென்று குடும்பத்தினரை பார்த்து விட்டு திரும்பும் தேசிங்.
திருப்போரூர்:
சென்னையை அடுத்துள்ள கோவளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை டாக்டருக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது.
கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த டாக்டர் ராமலிங்கத்துக்கு சொந்தமான இந்த பங்களாவில் தேசிங் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
டாக்டரின் குடும்பத்தினர் எப்போதாவது பண்ணை வீட்டுக்கு சென்று பொழுதை போக்குவார்கள். சில நேரங்களில் அங்கு தங்குவது வழக்கம். இவர்கள் இல்லாத நேரத்தில் காவலாளி தேசிங் பண்ணை வீட்டை பார்த்துக் கொள்வார்.
இவர் தங்குவதற்காக பண்ணை வீட்டு வளாகத்திற்குள்ளேயே சிறிய செட் ஒன்றும் போடப்பட்டுள்ளது.தேசிங் அங்கேயே தங்கி இருந்து கடந்த 8 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
செம்மஞ்சேரியில் உள்ள வீட்டுக்கு எப்போதாவது சென்று குடும்பத்தினரை பார்த்து விட்டு திரும்பும் தேசிங், பண்ணை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு வந்தார்.
கடந்த 2 நாட்களாக தேசிங் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தேசிங்கின் மகன் மேகவண்ணன் பண்ணை வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தார். அங்கு தந்தை தேசிங் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காவலாளி தேசிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தேசிங்கின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்து தேசிங்கை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். அவர்கள் யார்? என்பது தெரிய வில்லை. பண்ணை வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கொள்ளையர்கள் புகுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அப்போது அவர்களை தேசிங் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரத்தில் சுத்தியலால் அடித்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து தேசிங்கை கொலை செய்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த கொலை சம்பவம் கோவளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.