தமிழ்நாடு

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நள்ளிரவு தனிமையில் இருந்த போலீஸ் ஜோடி சிக்கினர்: சஸ்பெண்டு செய்து அதிரடி

Published On 2023-11-21 10:32 GMT   |   Update On 2023-11-21 10:32 GMT
  • பூட்டிய அறைக்கு உள்ளே இருப்பது யார்? நீங்களாக வெளியில் வருகிறீர்களா? அல்லது கதவை உடைத்து உள்ளே வரட்டுமா? என்று கேட்டுள்ளார்.
  • பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவிட்டார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை காவேரி நகர் அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையின் கீழ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் இந்த அலுவலகத்தில் உள்ள ஏ.சி.அறை ஒன்றில் ஒரு ஆண், ஒரு பெண் என போலீஸ் ஜோடி ஒன்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உடனடியாக அங்கு விரைந்து சென்ற அவர் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு கதவை தட்டினார். யாரும் கதவை திறக்கவில்லை.

இதனையடுத்து அவர் பூட்டிய அறைக்கு உள்ளே இருப்பது யார்? நீங்களாக வெளியில் வருகிறீர்களா? அல்லது கதவை உடைத்து உள்ளே வரட்டுமா? என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து அந்த ஜோடி மெதுவாக கதவை திறந்து வெளியில் வந்தனர்.

அவர்கள் இருவரையும் அக்கோலத்தில் பார்த்த அந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினார். அதில் அந்த ஆண் போலீஸ்காரர் அதே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் உள்ளவர் என்றும், அந்த பெண் போலீஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணியில் உள்ளவர் என்றும் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்றும் தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை அளித்தார்.

இதனையடுத்து பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவிட்டார். இச்சம்பவம் சகபோலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News