தமிழ்நாடு செய்திகள்

நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதை காணலாம்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

Published On 2023-11-20 10:12 IST   |   Update On 2023-11-20 10:12:00 IST
  • திசையன்விளை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
  • திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை வரையிலும் கனமழை பெய்தது. நேற்று இரவிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் மலையையொட்டி அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த தொடங்கியது. மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 101 அடியை எட்டியது.

இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், இன்று அதன் நீர்மட்டம் மேலும் 2 அடி வரை உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 102.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 115.91 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,510 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்துக்காக 304.75 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் 18 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 68 அடியை கடந்த நிலையில், இன்று மேலும் 2 அடி அதிகரித்து 70.85 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் 33.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. 52 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 34.75 அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக 68 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைக்கு வினாடிக்கு 167 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. களக்காடு, திருக்குறுங்குடி, ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக திருக்குறுங்குடியில் பெய்த கனமழையால் அங்குள்ள பெரியகுளம் நிரம்பியது. ஒரு சில இடங்களில் வயல்களில் மழை நீர் தேங்கியது. களக்காட்டில் 3 வீடுகள் சேதம் அடைந்தன.

ராதாபுரத்தில் 67 மில்லிமீட்டரும், களக்காட்டில் 62,4 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 55 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 40 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 56 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாநகரில் பாளை, சமாதானபுரம், புதிய பஸ் நிலையம், முருகன்குறிச்சி, மார்க்கெட், வண்ணார்பேட்டை, சந்திப்பு, தச்சநல்லூர், டவுன், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்றும் கனமழை கொட்டியது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரு கரை களையும் தொட்டப்படி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இதையடுத்து திருக்குறுங்குடி மலையில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நம்பியாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருப்பதால் நம்பி கோவிலுக்கு செல்ல இன்றும் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதுபோல ஆற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் தணிந்ததும் மீண்டும் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து திருக்குறுங்குடி வனத்துறை சோதனை சாவடி மூடப்பட்டு, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணை பகுதியில் தலா 12 மில்லிமீட்டரும், கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ஏற்கனவே குண்டாறு, கருப்பாநதி அணைகள் நிரம்பி விட்ட நிலையில் ராமநதி மற்றும் கடனா அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

நேற்று பெய்த மழையில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 77 அடியானது. 84 அடி கொண்ட ராமநதி 78 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு தலா 5 அடி தண்ணீர் வந்தாலே அவை நிரம்பிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடவிநயினார் அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News