சென்னையில் பருவமழை பாதிப்பை தடுக்க 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை
- பருவமழையின்போது சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
- ஒரே நேரத்தில் பெய்யும் கன மழையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்குவது வழக்கம். போதுமான அளவுக்கு மழைப்பொழிவை கொடுக்கக்கூடிய இந்த பருவமழையின்போது வெள்ள பாதிப்புகளும் ஏற்படுவது உண்டு.
எனவே பருவமழைக்கு முன்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அரசு துறைகள் இணைந்து பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்.
அதே போல் இந்த ஆண்டும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது.
அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷ னர் குமரகுருபரன், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, பரந்தாமன், கருணாநிதி, அரவிந்த் ரமேஷ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கார்த்திகேயன், சித்திக், மண்டல அலுவலர்கள், குடிநீர் வாரியம், மெட்ரோ ரெயில், நீர்வளத்துறை, மின்வாரியம், பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை, நீர் வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எடுத்து கூறினார்கள்.
பருவமழையின்போது சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. அதுபோன்ற நிலை இந்த முறை வரக்கூடாது என்று எடுத்துரைத்த னர்.
சென்னையில் பல பகுதிகளில் நடக்கும் மழை நீர் கால்வாய் பணிகளை இந்த மாதத்துக்குள் முடிக்க கேட்டுக் கொண்டனர். மேலும் அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, கேப்டன் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இந்த பணிகள் தற்போது தொடங்கி இருந்தாலும் அதை விரைவுபடுத்தி பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும்.
மழை நீர் எளிதாக செல்லும் வகையில் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
கால்வாயில் பெருக்கெடுத்து வரும் உபரிநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் விவாதிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் பெய்யும் கனமழையை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
கடந்த ஆண்டில் பருவமழையின்போது தண்ணீர் தேங்கிய பகுதிகளை இந்த முறை தண்ணீர் தேங்காதவாறு பாார்த்துக் கொள்ளும்படி அமைச்சர்கள் கூறினார்கள்.
ஏற்கனவே கடந்த மாதம் 16-ந்தேதி நடந்த பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை ஆய்வு கூட்டத்தின்போது சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்க வலியுறுத்தினார்கள். அப்போது அதிகாரிகள் சரியான பதில் கூறாததால் இந்த கூட்டம் நடந்தது. எனவே இந்த கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.