தமிழ்நாடு

காயம் அடைந்த மாணவர் தினேஷ்

ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்- ஒருவருக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-08-16 09:47 GMT   |   Update On 2022-08-16 09:47 GMT
  • இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியால் மோதிக்கொண்டனர்.
  • பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாணவர் தினேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

திருவள்ளூர்:

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரிகளில் திருத்தணி, அரக்கோணம், கடம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் புறநகர் ரெயிலில் பயணம் செய்து சென்னை சென்று வருவது வழக்கம்.

இதில் இருதரப்பு மாணவர்களிடையே சென்னையிலும், பஸ், ரெயில்களிலும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. ரூட்டு தல பிரச்சினையில் அவர்கள் கத்தி, அதிவாளுடன் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வந்தது.

ஏற்கனவே ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று அறிவுரைகள் வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில் ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. எக்கனாமிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வரும் படித்து வரும் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பர் இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு மின்சார ரெயிலில் வந்தார். அவர் ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது அங்கிருந்த மற்றொரு தரப்பு கல்லூரி மாணவர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டனர்.

இதில் இருதரப்பு மாணவர்களும் அரிவாள், கத்தியால் மோதிக்கொண்டனர். இந்த தாக்குதலில் மாணவர் தினேசின் தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் பல மாணவர்களும் காயம் அடைந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்தது வந்தனர். உடனே மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாணவர் தினேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 12 தையல் போடப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் துணை போலீஸ் சூப்பரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News