தமிழ்நாடு

கார் குண்டு வெடிப்பு வழக்கு: காவலில் எடுத்த 2 பேரை கோவை அழைத்து வந்து விசாரணை

Published On 2023-12-03 05:19 GMT   |   Update On 2023-12-03 05:19 GMT
  • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
  • வழக்கை விசாரித்த நீதிபதி 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

கோவை:

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இதில் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற முயன்ற உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.

இந்த வழக்கினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலரை போலீசார் காவலில் எடுத்து கோவை அழைத்து வந்து அவர்களது வீடுகளுக்கு நேரில் அழைத்து சென்றும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரிஸ்(23), போத்தனூர் பொன்விழா நகரை சேர்ந்த தாஹா நசீர்(27) ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகமது இத்ரிஸ், தாஹா நசீர் ஆகிய 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் நேற்று மாலை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் தற்போது கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் உக்கடம் ஜி.எம். நகரில் உள்ள முகமது இத்ரிஸ் வீடு மற்றும் போத்தனூர் பொன்விழா நகரில் உள்ள தாஹா நசீரின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் ஒன்றாக கூடி பேசிய இடங்கள், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு திட்டம் தீட்டிய இடங்கள், யார், யாரெல்லாம் அதில் இருந்தனர் என்பது குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News