தமிழ்நாடு செய்திகள்

மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்

Published On 2023-03-06 14:23 IST   |   Update On 2023-03-06 17:43:00 IST
  • தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பழங்கள், காய்கறி தொழில் முக்கியமானதாகும்.
  • மக்கள் தரும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல. அதில் அவர்களின் வாழ்க்கை, கனவு அடங்கி உள்ளது.

மதுரை:

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த அரசு சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, பெண் கல்வி, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இதனை நீங்களும் அறிவீர்கள். அவைகளுக்கு நீங்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பழங்கள், காய்கறி தொழில் முக்கியமானதாகும்.

இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம் வறட்சியானவை. அங்கு பெரும் தொழில் நிறுவனங்கள் இல்லை. மதுரை மாவட்டத்துக்கும் சில குறிப்பிட்ட தேவைகள் உள்ளது.

அவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதில் மாவட்ட கலெக்டர்கள், துறை அலுவலர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்று நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

துறை வாரியாக நடைபெறும் பணிகளை துரிதப்படுத்தவும், தரமாக பணிகள் நடைபெறவும் ஆய்வு நடத்த வேண்டும். முக்கியமாக பட்டா மாறுதல், திருத்தம், சான்று வழங்குதல் போன்றவைகளில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை வழங்க முடியாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள். இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

மக்கள் தரும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல. அதில் அவர்களின் வாழ்க்கை, கனவு அடங்கி உள்ளது. கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகள், துரிதமாக முடிக்க வேண்டிய சாலை சம்பந்தப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம்.

மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சிக்காக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கருத்துக்களையும், உறுதிமொழியும் தெரிவித்துள்ளீர்கள். மாவட்டத்தில் திட்டங்களை செயலாக்கம் செய்யவும் சிறப்பாக மக்கள் பணிகளை மேற்கொள்ளவும் அரசு அதிகாரிகளுக்கு இந்த அரசு துணை நிற்கும்.

மாவட்ட கலெக்டர்கள் மக்கள் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசுக்கு எடுத்துக்கூறி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News