தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2022-12-09 11:17 IST   |   Update On 2022-12-09 15:58:00 IST
  • மதுரை ஆரப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது மற்றும் களப்பணி குழுவினரின் பணிகளை காணொலி காட்சி மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்களை முதலமைச்சர் வழங்கினார்.

மதுரை:

தூய்மை பணியாளர்களின் வாழ்வினை மேப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த திட்டம் தொடங்கியது.

இந்த திட்டத்தின் தொடக்க விழா மதுரை மாநகராட்சியில் உள்ள அண்ணா மாளிகையில் இன்று காலை நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இதற்கான இலட்சினை (லோகோ) மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்பின் தூய்மைப்பணியாளர்களுக்கான செல்போன் செயலியையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு தலைக்கவசம், கையுறை, காலுறை, ஒளிரும் மேல்சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். பின்பு தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட கள ஆய்வு பணிகள் மற்றும் மேம்பாட்டு திட்ட குறும்படங்களை பார்வையிட்டார். இதையடுத்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த தி.மு.க. கவுன்சிலர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் சால்வைகளை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், தளபதி, தமிழரசி, மேயர் இந்திராணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண்குமார் குராலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சியில் நடந்த விழாவை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருங்குடிக்கு சென்றார். அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கார் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

பின்னர் சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் உருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மதுரை விமான நிலையத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விழாக்கள் நடந்த மாநகராட்சி அலுவலகம் முதல் பெருங்குடி பகுதி மட்டுமின்றி முதலமைச்சர் சென்ற வழி நெடுகிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News