மதுரையில் 2-வது நாளாக ஆய்வு: 5 மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
- வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மதுரை:
அரசின் நிர்வாக பணிகள், வளர்ச்சி பணிகள், சட்டம்-ஒழுங்கு விவகாரம் உள்ளிட்டவைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின்படி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் நடந்து வரும் அரசு பணிகள், நடந்து முடிந்த திட்டப்பணிகள், மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட அரசின் நிலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார்.
அவர் நேற்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொழில் மற்றும் வணிக சங்க பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் கலந்து ரையாடினார். மாலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி.க்கள், 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு ரூ.18 கோடியே 43 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். செட்டிநாடு கட்டிட கலையை பயன்படுத்தி மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த அருங்காட்சியகத்தையும், அதில் இடம்பெற்று இருந்த தொல்பொருட்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இந்த நிலையில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 9 மணி அளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, மகளிர் திட்டம், வேளாண்மை, உழவர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகத்துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டம், பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கம், நகர்ப்புற சுகாதார திட்டம், கல்லூரி மாணவர்களுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டம், தகைசால் பள்ளி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா?, அந்தத் திட்டங்களின் மூலம் பயன்படும் பயனாளிகள் விவரம் உள்ளிட்டவைகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் நேரடியாக கேட்டிருந்தார்.
மேலும் அந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி சக்கரபாணி, தலைமைச் செயலர் இறையன்பு, கலெக்டர்கள் அனீஸ் சேகர் (மதுரை), ஜானி டாம் வர்கிஸ் (ராமநாதபுரம்), மதுசூதன் ரெட்டி (சிவகங்கை), விசாகன் (திண்டுக்கல்), ஷஜீவனா(தேனி) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.