தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

அரசு பேருந்தில்தான் பள்ளிக்கு வருவேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-12-17 18:37 IST   |   Update On 2022-12-17 20:29:00 IST
  • பள்ளியில் படிக்கும் போது நான் அமைச்சரின் மகனாக நடந்து கொண்டதில்லை.
  • மாநிலத்தின் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவில்லை.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

நான் படித்த பள்ளிக்கு போகிறேன் என்று நேற்றிரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன். பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் மீண்டும் கிடைக்காத காலம் ஆகும். இந்த பள்ளியில் சேர்வதற்கு தேர்வு எழுதினேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை, இந்த பள்ளியில் நான் படித்த போது எனது தந்தை கலைஞர் கருணாநிதி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

பள்ளியில் அமைச்சரின் மகன் என்று நான் காட்டிக் கொள்வதை எனது தந்தை விரும்பமாட்டார். படிக்கும் போது நான் அமைச்சரின் மகனாக நடந்து கொண்டதில்லை. இது என்னுடன் படித்த உங்கள் அனைவருக்கும் தெரியும். அரசு பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன், தற்போதும் பேருந்தில் தான் வரவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் பாதுகாவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

நான் அரசியலுக்கு வருவேன் என்றோ, ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக வருவேன் என்றோ நினைத்துப் பார்த்ததில்லை. நீங்களும் நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனால் அது தற்போது நடந்துள்ளது. முதன்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மேயர் நான்தான். மேயராக இருந்த போது இந்த பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

தற்போது முதலமைச்சராக வரவில்லை, முன்னாள் மாணவராகவே வந்துள்ளேன். முதலமைச்சராக என்னை உருவாக்கியது இந்த பள்ளி தான். இப்படி ஒரு உயர்ந்த இடத்திற்கு நான் வந்ததற்கு இந்த பள்ளியும் ஒரு முக்கிய காரணம் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்.

அனைத்தையும் அரசு மட்டுமே வழங்க முடியாது. அரசு பள்ளிகளில் படித்தவர்கள், முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிகளுக்கு முடிந்த உதவிகளை வழங்க வேண்டும். அதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது. இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News