தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து ஆலோசனை தெரிவிக்க அறநிலையத்துறை அழைப்பு

Published On 2022-06-12 07:38 GMT   |   Update On 2022-06-12 07:38 GMT
  • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
  • சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் அறநிலையத்துறை உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 2 நாட்கள் ஆய்வு செய்ய சென்றனர்.

இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்த நிலையில் கோவில் நிர்வாகம் குறித்து கருத்து தெரிவிக்க ஆலோசனை வழங்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 3 மணிவரை நேரில் தெரிவிக்கலாம். அதோடு மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News