தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் வீரர் குகேஷ்

Published On 2023-09-12 10:22 GMT   |   Update On 2023-09-12 10:22 GMT
  • லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியலில், உலக கோப்பை செஸ் போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தார்.
  • முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.

சென்னை:

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக இடம் பிடித்துள்ளார். கடந்த மாதம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்து விஸ்வநாதன் ஆனந்தை (2754 புள்ளி) முந்தினார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு மாதமும் ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியலில், உலக கோப்பை செஸ் போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தார். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.

இதன் மூலம் குகேஷ் 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தை முந்தி அந்த இடத்தை அதிகாரப்பூர்வமாக பிடித்தார்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குகேஷூக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். மேலும் செஸ் வீரர் குகேஷூக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News