மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி- வீரர்கள் தங்கும் ஓட்டல்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
- மாமல்லபுரத்தில் சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டி ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மற்றும் முழு உடல் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2,500 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
அவர்கள் அனைவரையும் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் பகுதிகளில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற 37 ஓட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வீரர்களுக்கான உணவு, பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம் குறித்து ஓட்டல் நிர்வாகிகள், சமையல் கலைஞர்களுடன், மருத்துவ, சுகாதார குழு தலைவர் மற்றும் சுகாதார முதன்மை செயலர் செந்தில்குமார், சுகாதார திட்ட இயக்குனர் உமா, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது ஓட்டல் நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கூறியதாவது:-
வீரர்கள் தங்கும் 37 ஓட்டல்களிலும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை யோகா நடத்தப்பட வேண்டும். கொசு, பூச்சி தொல்லைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மற்றும் முழு உடல் பரிசோதனை செய்திருக்க வேண்டும். கண்டிப்பாக உணவுகளில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை திரும்ப பயன்படுத்த கூடாது.
ஒவ்வொரு ஓட்டலிலும் 108 ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். சுகாதாரம் சார்ந்த உதவிகளுக்கு உடனடியாக 104 என்ற நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தரவேண்டும். அனைத்து பணியாளர்களும் மருத்துவ காப்பீடு செய்வது அவசியம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.