தமிழ்நாடு செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,146 கன அடியாக அதிகரிப்பு

Published On 2023-06-19 12:20 IST   |   Update On 2023-06-19 12:20:00 IST
  • கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 225 கன அடி தண்ணீர் வருகிறது.
  • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கும்போது உபரி நீர் திறப்பது வழக்கம்.

பூந்தமல்லி:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இடி, மின்னலுடன் மழை கொட்டுவதால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று காலையும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி வருகிறது.

இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழைகொட்டி தீர்த்தது. சுமார் 11 செ.மீட்டர் மழை பெய்து உள்ளது.

இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1146 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 19.17 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2,403 மி. கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

மேலும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 225 கன அடி தண்ணீர் வருகிறது. இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள பகுதிகளில் இருந்து தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கும்போது உபரி நீர் திறப்பது வழக்கம். ஆனால் இப்போது ஏரியில் 19 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படாது.

Tags:    

Similar News