தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க 50 இடங்களில் சிறப்பு முகாம்- மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாடு

Published On 2023-07-23 07:55 GMT   |   Update On 2023-07-23 07:55 GMT
  • ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.
  • முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கி பயனடையலாம்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான மு.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் உரிமைத் தொகை பெற கட்டணமின்றி "சேமிப்பு கணக்கு" தொடங்க 50 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்து உள்ளது.

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் வரும் ஜூலை 24-ந் தேதி தொடங்குகின்றன.

இத்திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, சேமிப்பு கணக்கு துவங்க, முகாம் நடக்கும் நாளில் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, 2 பாஸ் போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை கொண்டு ஆரம்ப தொகை இல்லாமல் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் கிளைகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அருகாமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

பொது மக்கள் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி நடத்தும் இந்த முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கி பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News