தமிழ்நாடு செய்திகள்

விஜயகாந்தின் சகோதரர்கள் செல்வராஜ், பால்ராஜ், சகோதரி சித்ரா.

விஜயகாந்த் ஒரு தந்தைபோல் இருந்து எங்களை வழிநடத்தினார்... சகோதரி-சகோதரர்கள் உருக்கம்

Published On 2023-12-29 11:45 IST   |   Update On 2023-12-29 11:45:00 IST
  • அண்ணனின் இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இழப்புதான்.
  • மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிலும், அரசியலிலும் முன்னுக்கு வந்தார். அவருடைய உழைப்பால் தான் எங்கள் குடும்பம் தலைநிமிர்ந்து இருந்தது.

மதுரை:

விஜயகாந்த் தெரியும்... அவரது உண்மையான பெயர் விஜயராஜ் என்பது எத்தனை பேருக்கு தெரியும்...!

மதுரை வீதிகளில் அவரது கால்தடம் படாத இடங்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு தூங்காநகருடன் மிகுந்த பிணைப்பை ஏற்படுத்தி இருந்தார்.

மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர், கள்ளழகர், ஆண்டாள் மீது அதிக பக்தி கொண்டவர். அதேபோல் பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வழிபடக்கூடியவர்.

மீனாட்சி அம்மன் மீது கொண்ட பக்தி காரணமாக மீனாட்சி திருக்கல்யாணம் என்ற படத்தில் சிவபெருமானாக நடித்து இருப்பார்.

எந்த நல்ல நிகழ்வாக இருந்தாலும் மதுரையில் தன் சொந்தபந்தங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படிதான் தே.மு.தி.க. கட்சியை மதுரை தோப்பூரில், 75 ஏக்கர் பரப்பிலான திடலில் பிரமாண்ட மாநாடு நடத்தி, மக்களை திரட்டி அவர்கள் முன்பு அறிவித்தார்.

திரையுலகிற்கு வருவதற்கு முன்பு துடிப்பான இளைஞரான விஜயகாந்தின் வாழ்க்கையை அவருடைய குடும்பத்தினர் நேற்று நம்முடன் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் கூறிய தகவல்களை இங்கே காண்போம்...! 

மதுரை மேலமாசி வீதியில் உள்ள விஜயகாந்தின் வீடு.

மதுரை மேலமாசி வீதி சவுராஷ்டிரா லைன் பகுதியில் உள்ள 'ஆண்டாள் பவனம்' என்ற வீட்டில்தான் விஜயகாந்த் சிறுவயதில் வாழ்ந்தார். அந்த வீட்டில், விஜயகாந்தின் இளம்வயது புகைப்படங்கள் நிறைய உள்ளன.

தற்போது அந்த வீட்டில் விஜயகாந்தின் சகோதரர் செல்வராஜ் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

விஜயகாந்த் எனக்கு 2-வது சகோதரர். எங்களுடன் பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். அதில், 6 ஆண்கள், 5 பெண்கள்.

மூத்தவர் நாகராஜ், அதற்கடுத்தபடியாக விஜயராஜ் (விஜயகாந்த்), அதன்பின்னர் செல்வராஜ், பால்ராஜ், ராமராஜ், பிரித்திவிராஜ். இதுபோல் விஜயலட்சுமி, திருமளாதேவி, சித்ரா, மீனாகுமாரி, சாந்தி என 5 சகோதரிகள். தற்போது மதுரையில் நானும் எனது சகோதரர் பால்ராஜ் மட்டுமே இருக்கிறோம். மற்றவர்கள் சென்னை, ஓசூர், தேனி ஆகிய இடங்களில் வசித்து வருகின்றனர்.

விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர். எல்லோரிடத்திலும் அன்பு காட்டுவார். எங்கள் குடும்பம் பெரியது என்பதால் விஜயகாந்த் ஒரு தந்தை போல் இருந்து எங்களை வழிநடத்தினார். எந்த முடிவாக இருந்தாலும் அப்பாவிற்கு அடுத்தபடியாக அவர்தான் எடுத்தார். அந்த முடிவில் எப்போதும் உறுதியாக இருந்தார்.

விருத்தாசலம் தொகுதியில்தான் முதன்முதலில் அவர் போட்டியிட்டார். அந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்து வணங்கிச்சென்று மனு தாக்கல் செய்தார். அப்படிப்பட்டவரை இழந்து நாங்கள் இப்போது தவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒத்தக்கடையை சேர்ந்த விஜயகாந்தின் மற்றொரு சகோதரர் பால்ராஜ் கூறியதாவது:-

அண்ணனின் இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இழப்புதான். எல்லாத்துறையிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இருக்கிறார். நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்த நாட்கள் அவ்வளவு அழகானவை. அதை எண்ணிப்பார்க்கும்போது தானாக கண்களில் கண்ணீர் வருகிறது. அவர் நன்றாக இருந்த சமயங்களில் எங்களுக்கு எல்லாவிதமாக உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார். அவர் எப்படி நன்றாக இருந்தாரோ, அதுபோல் எங்களையும் பார்த்துக்கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேனியை சேர்ந்த சகோதரி சித்ராவும் மதுரை வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கூறியதாவது:-

மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிலும், அரசியலிலும் முன்னுக்கு வந்தார். அவருடைய உழைப்பால் தான் எங்கள் குடும்பம் தலைநிமிர்ந்து இருந்தது. தற்போது அவரை இழந்துவிட்டோம். எங்கு சென்றாலும், விஜயகாந்த் பெயரை கூறி பெருமை அடைந்தோம். யாருக்கும் எந்தவித தீங்கும் நினைக்காத நல்ல மனிதர். வீட்டிற்கு சென்றால் பாசமாக பார்த்து கொள்வார். என்னைபோல், என் உடன்பிறந்த அனைவரிடமும் நல்ல பாசத்துடன் இருந்தார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News