தமிழ்நாடு

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: 12 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்

Published On 2024-04-20 07:34 GMT   |   Update On 2024-04-20 07:34 GMT
  • கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
  • கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் எச்5என்1 என்ற பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக கேரள எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்ப கவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக, கேரள எல்லையான வாளையார் உள்பட 12 சோதனை சாவடிகளிலும் சிறப்பு கால்நடை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளனர்.

கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிகளின் எரு, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள், வாத்துகள், வாத்து முட்டைகள் உள்ளிட்ட பறவைகள் தொடர்பாக பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை எல்லையிலேயே நிறுத்தி கேரளாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர மாவட்டத்தில் 1252 கோழிப்பண்ணைகள் உள்ளது. இந்த பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கண்காணித்து வருகிறோம்.

மேலும் பண்ணைகளில் திடீர் கோழி உயிரிழப்புகள், பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தவிர கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய 432 மாதிரிகள் எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்படவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News