சிறந்த உணவு நகரங்கள் பட்டியல்... சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?
- இந்தியாவில் மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ ஆகிய 5 நகரங்கள் முதல் 100 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
- லக்னோவில் கபாப்ஸ், பிரியாணி உள்ளிட்ட உணவுகள் பிரபலமாக உள்ளன.
சாப்பாடு... எங்கு போனாலும் சாப்பாடுதான் முக்கியம்...
ஒரு நகரத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக உணவுகள் உள்ளன. ஒவ்வொரு நகரங்களில் செய்யப்படும் தனித்துவமான சுவைகள் கொண்ட உணவு சமையல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
தெருவோர கடைகள் முதல் சின்ன சின்ன உணவகங்கள் வரை உள்ளூர் உணவுகள் கவர்ந்திழுக்கின்றன.
வெளியூர்களில் இருந்து ஒவ்வொரு நகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அந்த ஊர் உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.
உள்ளூர் உணவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அனுபவமிக்க பயண ஆன்லைன் வழிகாட்டி நிறுவனம் ஒன்று சமீபத்தில் உலக அளவில் சிறந்த உணவு நகரங்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில் இந்தியாவில் மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் லக்னோ ஆகிய 5 நகரங்கள் முதல் 100 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அதிலும் 35-வது இடத்தில் மும்பை, 39-வது இடத்தில் ஐதராபாத் இடம் பிடித்துள்ளது. மும்பையில் உள்ள ஆலு டிக்கி கோல் கபே, சாட் பூரி, பேல் பூரி, ரக்தா பாட்டிஸ் வட பாவ் மற்றும் பாவ் பாஜி போன்ற பலவிதமான மும்பை உணவுகள் உலக அளவில் பிரபலமாக உள்ளன.
ஐதராபாத்தை பொருத்தவரை பிரியாணிக்கு பெயர் பெற்றிருந்தாலும் இங்கு உள்ளூர் உணவுகளையும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஹலீம், சிக்கன் 65, கபாப், சமோசா, பாயா மற்றும் நிஹாரி ஐதராபாத்தில் ரசிக்கக்கூடிய உணவுகளாக இடம் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் சென்னை 65-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் தயாராகும் இட்லி, தோசைக்கு உலக அளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் பணியாரம், வடை, பஜ்ஜி பக்கோடா மற்றும் ஊத்தப்பம் போன்றவற்றையும் அதிக அளவில் ருசித்து சாப்பிடுகின்றனர். இதனால் சென்னை உலக அளவில் சிறந்த உணவு நகரங்களுக்கான பட்டியலில் 65-வது இடத்தில் உள்ளது.
தற்போது சென்னையில் சாப்பிடக்கூடிய தோசை உலக அளவில் காலை உணவாக இடம் பெற்று வருகின்றன.
லக்னோவில் கபாப்ஸ், பிரியாணி உள்ளிட்ட உணவுகள் பிரபலமாக உள்ளன.
இந்த பட்டியலில் இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு சுவையான உணவுகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.
பாஸ்தா, பீட்சா, சீஸ் சார்ந்த உணவுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது.
உள்ளூர் உணவுகளை பொருத்தவரை பொதுமக்கள் தோசை, வடை, பிரியாணி மற்றும் பலவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகள் வயிற்றை நிரப்புவது மட்டுமல்லாமல் முழு அனுபவத்தையும் திருப்தியும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.