மோசமான வானிலை: பெங்களூர் சென்ற 14 விமானங்கள் சென்னையில் தரை இறக்கப்பட்டது
- கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக கூடுதல் அதிகாரிகளும், தரை தள ஓடுபாதை பகுதிக்கு கூடுதல் லோடர் ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர்.
- வானிலை சீரடைந்த பின்னர் இந்த விமானங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூர் புறப்பட்டு சென்றன.
ஆலந்தூர்:
பெங்களூரில் நேற்று இரவு மோசமான வானிலை நிலவியது. இதன்காரணமாக பெங்களூரரில் தரையிறங்க வேண்டிய கொல்லகத்தா, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த 14 விமானங்கள் திருப்பி விடப்பட்டு அடுத்தடுத்து சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கின.
இந்த விமானங்களில் வந்த பயணிகள் அனைவரும், விமானங்களை விட்டு கீழே இறக்காமல், விமானங்களிலேயே அமர்ந்து இருந்தனர். அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், உணவு, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இரவு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில், நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை, வெளிநாட்டு விமானங்கள் பெருமளவு வந்து தரை இறங்கும். அந்த நேரத்தில், பெங்களூரில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள், சென்னையில் வந்து தரை இறங்கியதால்,சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக கூடுதல் அதிகாரிகளும், தரை தள ஓடுபாதை பகுதிக்கு கூடுதல் லோடர் ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர்.
இன்று அதிகாலை ஒரு மணிக்கு மேல் பெங்களூரில் வானிலை சீரடைந்த பின்னர் இந்த விமானங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக பெங்களூர் புறப்பட்டு சென்றன.