தமிழ்நாடு செய்திகள்

ஆயுதபூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து வெளியூர் செல்ல பஸ், ரெயில்களில் இடங்கள் நிரம்பின

Published On 2023-10-17 15:32 IST   |   Update On 2023-10-17 15:32:00 IST
  • சென்னையில் இருந்து தினமும் 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.
  • வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் நிரம்பி செல்கின்றன.

சென்னை:

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்குவதாக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து வருகிற 20, 21 மற்றும் 22-ந் தேதி ஆகிய நாட்களில் 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

சென்னையில் இருந்து தினமும் 2,100 பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கூடுதலாக 1000 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரெயில்களில் ஒரு வாரத்திற்கு இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. 20-ந் தேதியில் இருந்து அடுத்த வாரம் 27-ந் தேதி வரை ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டன.

இதே போல வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களும் நிரம்பி செல்கின்றன. இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளது.

இதுபோல அரசு விரைவு பஸ்களிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. குறிப்பாக 20, 21 மற்றும் 24-ந் தேதிகளில் இடங்கள் இல்லை. பிற போக்குவரத்து கழக பஸ்களிலும் விறுவிறுப்புடன் முன்பதிவு நடைபெறுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

20-ந் தேதி பயணம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரூ.29 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக தேவையான அளவு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் 2,500 அரசு பஸ்களில் தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையைபோல ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆம்னி பஸ்களில் வழக்கம் போல பயணிகளின் தேவையை பொறுத்து கட்டணத்தை உயர்த்தி விட்டனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஏ.சி. வசதி இல்லாத இருக்கைகளுக்கு ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி.வசதியுடன் இருக்கையாக இருந்தால் ரூ.2ஆயிரம் வரையிலும், படுக்கையாக இருந்தால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து 20, 21, 22 மற்றும் வெளியூர்களுக்கு சென்னை திரும்ப 24, 25-ந் தேதிகளில் பயணம் செய்ய பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.

Tags:    

Similar News