தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை பரிசீலிக்க சி.பி.ஐ.க்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2023-09-21 03:38 GMT   |   Update On 2023-09-21 03:38 GMT
  • நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி சமர்ப்பித்தார்.
  • ‘ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவரது சாவில் மர்மம் உள்ளது என்று பலர் குற்றச்சாட்டு சுமத்தினர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவருக்கு வழங்கப்பட்ட 75 நாட்கள் சிகிச்சைகளுக்கும், அவரது மரணம் குறித்த சந்தேகங்களுக்கும் விடைகாணும் வகையில் ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அரசு 2017-ம் ஆண்டு அமைத்தது.

அதன்படி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அறிக்கையை அரசிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந் தேதி சமர்ப்பித்தார்.

அதில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா, டாக்டர் சிவக்குமார், சுகாதாரத்துறை முன்னாள் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வேலூர், திருச்சி தினமலர் பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், 'ஆணையம் அறிக்கை தாக்கல் செய்து பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கும், சி.பி.ஐ.க்கும் மனு கொடுத்தேன். இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ ரீதியாக குற்றச்சாட்டுகள் உள்ளதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு எந்த ஒப்புதலும் இதுவரை அரசு வழங்கவில்லை என்று கூறினார்.

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை சி.பி.ஐ., சட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News