தமிழ்நாடு செய்திகள்

விளமல் சிவன் கோயில் நகரில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய காட்சி.

திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் 4 அரசு அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை

Published On 2023-04-27 15:56 IST   |   Update On 2023-04-27 15:56:00 IST
  • புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர்.
  • சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.

திருவாரூர்:

திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனை சேர்ந்தவர் முத்துமீனாட்சி. இவர் தற்போது விழுப்புரம் சர்க்கரை ஆலையின் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே தங்கி உள்ளார்.

இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த போது நத்தம் புறம்போக்கு இடத்தில் வீட்டு மனைபட்டா வழங்கியதும், அந்த இடத்தை நெடுஞ்சாலைதுறை விரிவாக்க பணிக்காக மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர். அதில் முத்து மீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி, உதவியாளர் கார்த்தி, அடியக்கமங்கலத்தை சேர்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், திருப்பாலியூர் சுகுமாரி ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று திருவாரூரில் உள்ள முத்து மீனாட்சி வீட்டிற்கு 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அப்போது வீட்டின் வெளி கதவை பூட்டிவிட்டு வீட்டில் இருந்தவர்களை வெளிளே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பல்வேறு அறைகளில் சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.

இதேப்போல் வீட்டு மனை பட்டா முறைகேட்டுக்கு உதவியாக இருந்ததாக கூறி அப்போதைய அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ.வும், தற்போதைய விளமல் வி.ஏ.ஓ.வுமான துர்காராணி என்பவரின் விளமல் சிவன் கோவில் நகரில் உள்ள வீடு மற்றும் அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ. உதவியாளர் கார்த்தி என்பவரது அடியக்கமங்கலத்தில் உள்ள வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி தனி குழுவாக சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேப்போல் தஞ்சாவூரில் உள்ள நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை என்பவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

மேலும் சோதனை நடைபெறும் திருவாரூர் மாவட்டம் 3 அரசு அலுவலர்கள் மற்றும் தஞ்சையில் உள்ள ஒரு அரசு அலுவலர் ஆகிய 4 பேரின் வீடுகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 4அரசு அலுவலர்களின் வீடுகளில் நடந்து வரும் சோதனை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News