ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்: அண்ணாமலை
- கரூரில் மது போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது.
- தி.மு.க. அமைச்சர்கள் 35 பேரில் பாதி பேர் ஊழல்வாதிகளாக உள்ளனர்.
கரூர்:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் நடந்தது. கரூர் சட்டமன்றத் தொகுதி தான்தோன்றி மலை பகுதியில் நடந்த நடை பயணத்தின்போது அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழல் இல்லாத ஒரு தமிழகத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். கரூர் மாவட்டத்தில் இருந்து நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் அமைச்சர் உதயநிதி உட்கார்ந்து நீட் தேர்வு என்னவென்று கற்றுக்கொண்டால் பிரச்சனை வராது. கர்மவீரர் காமராஜர் மூடியிருந்த 12 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். புதிதாக 6 ஆயிரம் பள்ளிகளை உருவாக்கினார். 1954-ம் ஆண்டு முதல் 1963 -ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் குடிக்க சொல்கிறார்கள்.
அரசியலுக்கு வரும்போது பூஜ்ஜியமாக இருந்த எ.வ. வேலு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த 30 மாதங்களில் 2 மருத்துவக் கல்லூரிகளை திறந்து உள்ளார். இந்த மருத்துவ கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அவர் செய்த தவறுக்காக சிறையில் உள்ளார். கரூரில் மது போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கரூர் எம்.பி. ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதால் திடீரென்று சென்று மக்களை சந்தித்து போட்டோ சூட் நடத்துகிறார். 5 ஆண்டுகளில் கரூர் தொகுதிக்கு என்ன செய்தார் என்று ஜோதிமணி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அரிவாள் வெட்டு நடக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றுகிறார்கள். தி.மு.க . ஆட்சியில் காவல்துறையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் உட்பட தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் அடுத்ததன் மீது ரெய்டு வந்து விடக்கூடாது என்று கோவில் கோவிலாக செல்கிறார்கள். தி.மு.க. அமைச்சர்கள் 35 பேரில் பாதி பேர் ஊழல்வாதிகளாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்களுடன் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சியில் அமருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.