தமிழ்நாடு செய்திகள்

9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.10½ லட்சம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது: அண்ணாமலை

Published On 2023-09-22 14:50 IST   |   Update On 2023-09-22 14:50:00 IST
  • தி.மு.க. அரசு தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி உள்ளது.
  • தி.மு.க. அரசு கடந்த 29 மாத ஆட்சிக்காலத்தில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை மேற்கொண்டார். பின்னர் நேற்றிரவு அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் 2022-23ம் ஆண்டில் 22 விழுக்காடு விற்பனை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான சாராய ஆலைகள் தி.மு.க. கைவசம் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் கள்ளுக்கடை திறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

இந்து மதத்தை தவறாக பேசி அழிக்க பார்க்கின்றனர். நாங்கள் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தினரையும் அரவணைத்து வருகிறோம். பா.ஜ.க. அரசு கடந்த 9 ஆண்டு காலமாக சிறப்பான ஆட்சி கொடுத்து கொண்டிருக்கிறது.

9 ஆண்டு காலத்தில் மோடி அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிதி ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி. ஆனால் தி.மு.க. அரசு தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி உள்ளது. 2024 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறினாலும் நாங்கள் தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து வேரோடு அறுக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

தி.மு.க. அரசு கடந்த 29 மாத ஆட்சிக்காலத்தில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். 28 கட்சி சேர்ந்து இந்தியா கூட்டணி என்று வைத்துள்ளனர். மோடி என்ற ஒற்றை மனிதனை வீழ்த்துவதற்காக சேர்ந்துள்ளனர். வருகிற 2024-ம் ஆண்டு மக்கள் பெரும்பாலானவர்கள் மோடியை ஆதரித்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்று மாலை திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News