உள்ளூர் செய்திகள்

எங்கள் கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை- அண்ணாமலை பேட்டி

Update: 2023-03-24 05:33 GMT
  • தேர்தல் வாக்குறுதி எதுவும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.
  • மக்கள் நீதி மையம் காங்கிரசுடன் தான் போகப்போகிறது.

மதுரை:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டப்படி எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கிறதோ, அவரது பதவிக்காலம் சஸ்பெண்டு ஆகும். லட்சத்தீவு எம்.பி.க்கு இதே பிரச்சினை உள்ளது. பீகார், உத்தரபிரதேசத்தில் இது போல் சில எம்.பி.க்களுக்கு நடந்துள்ளது. ராகுல் காந்திக்கு வேண்டுமென்றே சூரத் கோர்ட்டு தண்டனை வழங்கியுள்ளதாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் இதனை திசைதிருப்பி வருகிறார்கள். அவருக்கு 30 நாட்கள் அவகாசம் மேல்முறையீடு செய்ய தான் வழங்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா, உள்துறை மத்திய மந்திரி அமித்ஷா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோரை நேற்று டெல்லியில் சந்தித்தேன். கடந்த ஒரு மாத காலத்தில் 2, 3 முறை கர்நாடக தேர்தல் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவை நான் சந்தித்துள்ளேன்.

பா.ஜனதா கட்சியை பொருத்தவரை அகில இந்திய தலைமையில் இருந்து தேசிய தலைவர், பிரதமர், உள்துறை மத்திய மந்திரியில் இருந்து தமிழ்நாட்டில் கடைகோடியில் உள்ள கட்சியில் காரியகர்த்தாவரை அனைவருக்கும் கட்சியை எப்படி வலிமைப்படுத்துவது? தமிழக மக்களின் அன்பை எவ்வாறு பெறுவது, தமிழகத்தை ஆளும் கட்சியாக பா.ஜனதாவை எப்படி கொண்டுவருவது? என்பது தான் எண்ணமாக இருக்கிறது. அதில் அனைவரும் தெளிவாக இருக்கிறோம்.

தமிழகத்தின் அரசியல் களம் பல்வேறு விதமாக உள்ளது. அதில் பா.ஜனதாவின் வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது? தமிழகத்தின் நிலை என்ன? போன்ற விபரங்கள் தொடர்பாக பேசுவதற்காக தேசிய தலைவர் நட்டா, உள்துறை மத்திய மந்திரி அமித்ஷா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தேன். இது வழக்கமாக நடக்கக்கூடிய ஒரு சந்திப்பு தான்.

கூட்டணியை பொருத்தவரை எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ள பார்லிமெண்டரி குழு அதுகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த குழுவே கூட்டணி தொடர்பான விசயங்களை முன்னெடுத்து செல்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கோ, எனக்கோ தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சியின் மீதும், எந்த ஒரு தலைவரின் மீது கோபமோ, ஆதங்கமோ எதுவும் இல்லை. எல்லா கட்சியினரும் அவரவர் கட்சி வளர்ச்சி வளர வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். ஒரு கூட்டணியில் இருந்தாலும் அது தான் தர்மம்.

அ.தி.மு.க. என்பது ஒரு பெரிய கட்சி. அவர்கள் வளர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதே போல் பா.ஜனதா கட்சியும் வேகமாக வளர வேண்டும், தமிழக மக்களின் அன்பை பெற வேண்டும் என்று நினைப்பதும் தவறில்லை. இது போல் நினைக்கும்போது கூட்டணிக்குள் சில சலசலப்பு வருவது சகஜம்.

காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில் தங்கள் கட்சி வளர வேண்டும் என அந்த கட்சியில் இருப்பவர்கள் யாரும் இதுவரை கூறவில்லை. தி.மு.க.வுடனான அவர்களது கூட்டணி ஒரு விசித்திரமான கூட்டணி. எங்களது கூட்டணி ஆக்கப்பூர்வமான கூட்டணி.

சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தல், மீம்ஸ் வீடியோ வெளியிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை தமிழகத்தில் கைது செய்து அடைக்கிறார்கள். அத்தகைய தமிழகத்தில் முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஜனநாயகத்தை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அமைச்சர் நாசர் கனவுலகத்தில் இருக்கிறார். பால் கொள்முதல் விவகாரத்தில் இல்லாத தகவல்களை தெரிவிக்கிறா்ா. தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக பா.ஜனதாவின் விவசாய அணி சார்பில் கோட்டையை நோக்கி எடுத்து செல்வோம்.

தேர்தல் வாக்குறுதி எதுவும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் அவர்கள் செய்யவில்லை. இந்த அரசு மேக்அப் போட்டு அரசியல் நடத்தி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி தொடர்பாக கவர்னர் திருப்பி அனுப்பி இருக்கிறார். ஆளுநர் பல்வேறு கேள்விகளை கேட்கிறார். ஆனால் இந்த அரசு திருப்பித் திருப்பி மசோதாவை அனுப்புகிறது.

கவர்னர் மசோதாவிற்கு கையெழுத்து போட்டாலும் 100 சதவீதம் நீதிமன்ற தடை வர வாய்ப்பு உள்ளது எனத் தெரிந்தும் மீண்டும் மீண்டும் அனுப்புவதால் தி.மு.க. அரசுக்கும் சில அமைச்சர்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளுக்குள் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.

மக்கள் நீதி மையம் காங்கிரசுடன் தான் போகப்போகிறது. தொடர்ந்து பலமுறை இல்லை என மறுத்தாலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் கமல்ஹாசன் நடந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News