தமிழ்நாடு செய்திகள்

அனகாபுத்தூர் பகுதிக்கு அடுத்த மாதம் முதல் கூடுதலாக செம்பரம்பாக்கம் ஏரி நீர் கிடைக்கும்

Published On 2023-09-13 14:00 IST   |   Update On 2023-09-13 14:00:00 IST
  • அனகாபுத்தூரில் ரூ.18.88 கோடி செலவில் புதிதாக உயர்நிலை மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது.
  • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வினியோகம் 3.40 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும்.

தாம்பரம்:

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் தற்போது குடியிருப்புகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளது. பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை செய்ய முடியாமல் இருந்தது. இதனால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அப்பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் கிணற்று நீர் மற்றும் போர்வெல் தண்ணீரையே நம்பி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அனகாபுத்தூர் பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அனகாபுத்தூரில் ரூ.18.88 கோடி செலவில் புதிதாக உயர்நிலை மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி. பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மூலம் இனி அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு 3 முறை தண்ணீர் வழங்க முடியும். இதற்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மார்க்கெட் தெரு மற்றும் விநாயகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு மேல்நிலைத் தொட்டிகளையும் ஒரு மாதத்தில் தாம்பரம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் பம்மல் மண்டலத்தில் 15 ஆயிரத்து 973 வீடுகளில் வசிக்கும் 60 ஆயிரத்து 697 பேர் பயன் அடைவார்கள். தினமும் 8.19 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வினியோகம் 3.40 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என்றார்.

Tags:    

Similar News