தமிழ்நாடு

இதுவரை இல்லாத அளவாக 1.83 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன- சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் தகவல்

Published On 2023-06-24 06:29 GMT   |   Update On 2023-06-24 06:29 GMT
  • ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது.
  • உண்மையில், ஆமைக் குஞ்சு பொரிப்பில் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை கடலோரப் பகுதியில் அதிகாலை நேரங்களில் ஆமைகள் முட்டையிடும். இம்முட்டைகளை நீண்ட காலமாக நாய்களும், பறவைகளும் சிதைப்பதால், கடல் ஆமைகள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் மீன் வளத்தை அதிகரிக்கும் நோக்கில், அழிந்து வரும் கடல் ஆமைகளை பாதுகாக்கும் விதமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, வனத்துறை சார்பில் பெசன்ட் நகர் உள்ளிட்ட 3 இடங்களில் ஆமைக் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து படிப்ப டியாக தமிழக கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் ஆமை முட்டையிடும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொரிப் பகங்களில் அடைகாத்து, குஞ்சுகள் வெளியே வந்த பிறகு, கடலில் விடப்பட்டு வருகிறது.

இப்பணிகள் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறை வடைந்துள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாகு, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

இந்த ஆண்டு ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு 35 ஆமைக் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. அங்கு குஞ்சு பொரிக்கப்பட்ட 1 லட்சத்து 83 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும். இதற்காகப் பணியாற்றிய தன்னார்வலர்கள் மற்றும் வன களப்பணியாளர்களின் அளப்பரிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், ஆமைக் குஞ்சு பொரிப்பில் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News