தமிழ்நாடு

திருச்சியில் 39 தொகுதிகளுக்கான தபால் ஓட்டு ஒருங்கிணைப்பு மையம்

Published On 2024-04-17 04:18 GMT   |   Update On 2024-04-17 04:18 GMT
  • தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார்.
  • மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும்.

திருச்சி:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணியில் பல துறைகளை சேர்ந்த 4 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள், போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க தபால் ஓட்டு வசதியையும், ஒரே தொகுதிக்குள் பணியாற்றினால் பணிபுரியும் ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டளிக்கும் வசதியையும் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

வழக்கமாக பயிற்சி மையங்களில் பெறப்படும் தபால் ஓட்டுகளை தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரி பிரித்து, அவர் நியமிக்கும் அதிகாரி மூலம் அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவார். அதன் பின்னரும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளில் காலை 8 மணி வரை தபால் மூலம் அனுப்பப்படும் தபால் ஓட்டுகள் பெறப்படும்.

அத்துடன் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார். அங்கு அவர் சென்று அந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை அளித்துவிட்டு, அவர் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்று வருவார்.

இந்நிலையில் இந்தப்பணியில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட வேண்டியதாலும், இதனால் கால விரயம் ஏற்படுவதாலும், இந்த ஆண்டு தேர்தலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை ஏற்று, தபால் ஓட்டுகளை மையப்படுத்தி ஒருங்கிணைந்து, தொகுதிகளுக்கு பிரிந்து அனுப்பும் புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில் திருச்சி கலையரங்கம் திருமண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படுள்ளது.


இங்கு இன்று காலை 9 மணியில் இருந்து, மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்தல் கமிஷனின் தபால் ஓட்டுகளுக்கான இந்த புதிய நடைமுறையின் படி திருச்சியில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் ஓட்டுகளுடன் 39 தொகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் வந்து, திருச்சி மையத்தில் ஒப்படைப்பார்கள்.

இங்கு தொகுதி வாரியாக ஓட்டுகள் பிரிக்கப்பட்டு, அவர்கள் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்றுச் சென்று தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள் அதன்படி நேற்று வரை பெறப்பட்ட எல்லா தபால் ஓட்டுகளும் திருச்சி மையத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டு, உடனடியாக எல்லா தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகளுக்கு வீண் அலைச்சல் கால விரயம் கூடுதல் செலவு ஆகியவை தவிர்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News