தமிழ்நாடு

செங்கல்பட்டுக்கு மாலை நேரத்தில் கூடுதல் மின்சார ரெயில் இயக்கப்படுமா?- பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-09-30 07:31 GMT   |   Update On 2022-09-30 07:36 GMT
  • தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில்பாதை அமைக்கப்பட்டாலும் இன்னும் விரைவு ரெயில்கள் அறிமுகப்படுத்தவில்லை.
  • சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான மின்சார ரெயிலை விட செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரெயில் சேவை குறைவு.

செங்கல்பட்டு:

சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. தற்போது புறநகர் பகுதிகளில் மக்கள் குடியேறுவது அதிகரித்து உள்ளது.

செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சென்னை நகருக்குள் வருவதற்கு பெரும்பாலும் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

தினமும் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் எளிதான மற்றும் குறைந்த கட்டணம் என்பதால் மின்சார ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காலை, மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகம் காணப்படும்.

இந்த நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மாலை நேரங்களில் குறிப்பிட்ட நிறுத்தத்தில் நின்று செல்லும் வகையில் கூடுதல் மின்சார விரைவு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில்பாதை அமைக்கப்பட்டாலும் இன்னும் விரைவு ரெயில்கள் அறிமுகப்படுத்தவில்லை. இந்த வழித்தடத்தில் விரைவில் விரைவு ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இது குறித்து மின்சார ரெயில் பயணிகள் கூறும்போது, போதிய விரைவு ரெயில் இல்லாததால் நகரில் இருந்து பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் பயணிகள் அனைத்து நிலையங்களில் நின்று செல்லும் வழக்கமான மின்சார ரெயில்களில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் தாமதமாக வீட்டுக்கு திரும்புகிறார்கள்.

'சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான மின்சார ரெயிலை விட செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரெயில் சேவை குறைவு.

எனவே மாம்பலம், கிண்டி, பரங்கிமலை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்பவர்கள் தாம்பரத்தில் இறங்கி வேறு ரெயிலில் மாறி செல்ல வேண்டி உள்ளது.

மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை மேலும் 3 விரைவு மின்சார ரெயில்களை வைகளை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

இந்த ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே கூடுவாஞ்சேரி மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டும் நிறுத்தினால் பயண நேரம் குறைந்தது 15 நிமிடம் குறையும்.

மேலும் மற்ற ரெயில் நிலையங்களில் ஏறும் கூட்டமும் தவிர்க்கப்படும்' என்றனர்.

Tags:    

Similar News