தமிழ்நாடு

ஆடி அமாவாசை: திருவள்ளூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

Published On 2023-08-16 09:28 GMT   |   Update On 2023-08-16 09:28 GMT
  • மூலவர் வீரராகவரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.
  • ஆடி மாத தொடக்கமான கடந்த 17-ந்தேதி அன்றே அமாவாசை வந்தது.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில், அமாவாசை நாட்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.

இன்று ஆடி அமாவாசை என்பதால் நேற்று இரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் மற்றும் குளக்கரையில் இரவு தங்கி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கோவில் குளக்கரை மற்றும் காக்களூரில் உள்ள பாதாள விநாயகர் கோவில் அமைந்துள்ள ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

பின்னர் மூலவர் வீரராகவரை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

ஆடி மாத தொடக்கமான கடந்த 17-ந்தேதி அன்றே அமாவாசை வந்தது. ஆடி மாதத்தில் இன்று 2-வது அமாவாசை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News