தமிழ்நாடு செய்திகள்

கூட்டு பலாத்கார புகாரில் திருப்பம்... காதலனை சிக்க வைக்க கடத்தல் நாடகமாடிய இளம்பெண்

Published On 2023-02-05 19:51 IST   |   Update On 2023-02-05 19:51:00 IST
  • திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என சலீம் கூறி உள்ளார்.
  • சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட சலீமுடன் அந்த பெண் சென்றது தெரியவந்தது

செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் கிருஷ்ணவேணி என்பவரது வீட்டின் கதவை இளம்பெண் ஒருவர் தட்டியுள்ளார். தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து போராடி தப்பி வந்ததாகவும் காவல் நிலையத்தில் தன்னை ஒப்படைக்கும் படி கூறி உள்ளார்.

இதனைஅடுத்து சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கை களத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும், சென்னை சைதாப்பேட்டையில் தங்கி டெலிகாலராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இவருக்கும் உத்திரமேரூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என சலீம் கூறி உள்ளார். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அதேபோல நேற்று இரவும், செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த பெண்ணை சலீம் சாலவாக்கம் அருகே மாம்பாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே திருமணம் செய்து கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பெண்ணை தாக்கிய சலீம் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதைத்தொடர்ந்து அப்பெண் அருகே இருந்த வீட்டிற்கு சென்று சலீமை காவல்துறையிடம் சிக்க வைக்க கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடியிருக்கிறார்.

முன்னதாக காவல்துறையினரிடம் தன்னை காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக பெண் கூறியதால் செங்கல்பட்டு நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தப்பட்ட சலீமுடன் இரு சக்கர வாகனத்தில் அந்த இளம்பெண் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் திவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

Tags:    

Similar News