தமிழ்நாடு

கைதான முகமது மீராசா.

இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்- போலீசார் விசாரணை

Published On 2024-02-05 06:35 GMT   |   Update On 2024-02-05 06:35 GMT
  • நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
  • மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் துரித நடவடிக்கை எடுத்த போதிலும், அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் அரங்கேறத்தான் செய்கிறது.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல் லாணியை அடுத்த பெரிய பட்டினம் புதுமடம் புதுக்குடியிருப்பு கடற்கரை தென் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடலோர காவல் படையினர் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் அந்தோணி சகாய சேகர் மற்றும் போலீசார் பெரிய பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பதிவு செய்யப்படாத இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பெரியபட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த முஹம்மது மீராசா (வயது 42) என்று தெரியவந்தது. மேலும் அந்த படகை சோதனை செய்த போது அதில், சுமார் 12 பண்டல்களில் 6,84,600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து முஹம்மது மீராசாவை கைது செய்த போலீசார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News