காயல்பட்டினத்தில் 50 சதவீதம் வெள்ளம் இன்னும் வடியவில்லை: பாதிக்கப்பட்ட மக்கள் மசூதிகளில் தஞ்சம்
- தமிழக வரலாற்றிலேயே காயல்பட்டினத்தில் பெய்த மழை அளவு 2-வது அதிகபட்ச மழை பதிவாகும்.
- தேங்கியுள்ள வெள்ளம் கடல் பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்கிறது.
திருச்செந்தூர்:
வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பொழிந்துள்ளது.
நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை கொட்டி இருக்கிறது. இதுவரை இல்லாத மழை பொழிவாக பார்க்கப்படுகிறது.
தமிழக வரலாற்றிலேயே காயல்பட்டினத்தில் பெய்த மழை அளவு 2-வது அதிகபட்ச மழை பதிவாகும்.
இந்த பேய் மழையால் காயல்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அங்குள்ள சுலைமான் நகர், மங்களா நகர், சல்லி தெரடு, சீதக்காதி நகர், காட்டு தைக்கா தெரு, பரிமார்தெரு, காட்டு மொகுதும் பள்ளி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பல தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையானவர்கள் மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள மசூதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கடந்த 3 தினங்களாக மின்சாரம் இல்லாததால் காயல்பட்டின மக்கள் பெரிதும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லாததால் அவர்களால் வெளியுலகை தொடர்பு கொள்ள இயவில்லை.
நேற்று இரவில் இருந்து அங்கு மழை பெய்யவில்லை. இன்று காலை மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பல்வேறு தெருக்களிலும், சாலைகளிலும் வெள்ளம் இன்னும் வடியவில்லை. 50 சதவீதம் வெள்ளம் இன்றும் அங்கு வடியவில்லை.
தேங்கியுள்ள வெள்ளம் கடல் பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியும், நிவாரணமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.