தமிழ்நாடு

கோவை மத்திய ஜெயிலுக்குள் பிஸ்கெட் பாக்கெட்டில் மறைத்து கஞ்சா கடத்தல்- கைதிகள் உள்பட 4 பேர் சிக்கினர்

Published On 2023-07-09 06:00 GMT   |   Update On 2023-07-09 06:00 GMT
  • ஜெயிலுக்குள், பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.
  • உணவு பண்டத்தில் கஞ்சா மறைத்து வைத்து கைதிக்கு கொடுத்ததாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

கோவை:

கோவை மத்திய ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜெயிலுக்குள், பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.

ஜெயிலில் கைதிகள் செல்போன், கஞ்சா, பீடி, சிகரட் ஆகியவற்றை மறைத்து வைத்து பயன்படுத்துகிறார்களா? என ஜெயில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கைதிகளை பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்வையாளர்கள், உறவினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அப்போது போலீசார் பாதுகாப்புடன் உறவினர்கள் கைதிகளுடன் பேசுவதற்கும், உணவு பண்டங்களை கொடுப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படுகின்றது.

இதேபோல், நேற்று முன்தினமும் கைதிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது யாரோ 2 பேர் ஜெயிலுக்கு உணவு பண்டத்தில் கஞ்சா மறைத்து வைத்து கைதிக்கு கொடுத்ததாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இந்த தகவலின் பேரில், மத்திய ஜெயில் ஜெயிலர் சிவராஜன் தலைமையிலான போலீசார் தண்டனை கைதிகள் சிலரிடம் பார்வையாளர்கள் கொடுத்த உணவு பண்டங்களை வாங்கி சோதனை செய்தார்.

ஜெயிலில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோரிடம் சோதனை செய்த போது அவர்களுக்கு கொடுத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்து கொடுத்து சென்றது தெரியவந்தது.

அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் 4 கிராம் கஞ்சா இருந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது இருவரும் போலீசாரை மிரட்டினர். தொடர்ந்து போலீசார் யார் உங்களுக்கு கஞ்சா கொடுத்தது என முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்களை பார்க்க வந்த சிங்காநல்லூர் கக்கன் நகரை சேர்ந்த சேதுராமன், சூர்யபிரகாஷ் ஆகியோர் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து கொடுத்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், தண்டனை கைதிகளுக்கு பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்த கொடுத்து சென்ற சேதுராமன், சூர்யபிரகாஷ் மற்றும் கைதிகள் முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோர் மீது போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டம், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News