தமிழ்நாடு செய்திகள்
கைது

வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வடமாநில இளைஞர்கள் கைது

Published On 2022-05-29 10:01 IST   |   Update On 2022-05-29 10:01:00 IST
போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து வடமாநில இளைஞர்கள் மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்:

சென்னையைச் சேர்ந்தவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இவரது அண்ணன் பெரம்பலூர் அருமடல் பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தற்போது முழு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் சிறுமி விடுமுறைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணன் வீட்டிற்கு வந்தார்.

நேற்று முன்தினம் சிறுமியின் அண்ணனும், அண்ணியும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமி அண்ணனின் குழந்தையை பார்த்துக் கொண்டு இருந்தார். இதற்கிடையே அருமடல் பிரிவு ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிமெண்டு செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த தனியார் சிமெண்ட் செங்கல் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் தாகு பாணி பகுதியைச் சேர்ந்த சுனில் ராம் (வயது 20), பிலிங் ப்ரா பகுதியை சேர்ந்த காமேஸ்வர் சிங் (19), தபானி பகுதியைச் சேர்ந்த பெகு நாகசியா (20) ஆகிய மூவரும் வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

சிறுமி சத்தம் போட்டதும் மூவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இரவு வேலையை முடித்துவிட்டு வந்த அண்ணனிடம் சிறுமி நடந்தவற்றை அழுது கொண்டே கூறினார். இதை அறிந்த உறவினர்கள் ஆத்திரம் அடைந்து வடமாநில இளைஞர்கள் மூவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர் மருவத்தூர் போலீசார் விரைந்து சென்று மூவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மருவத்தூர் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு என்பதால் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

அதன் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து வடமாநில இளைஞர்கள் மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News