தமிழ்நாடு
அன்னாசி பழங்கள் வரத்து அதிகரிப்பு

கேரள அன்னாசி பழங்கள் வரத்து அதிகரிப்பு

Published On 2022-05-20 03:04 GMT   |   Update On 2022-05-20 03:04 GMT
கேரளாவில் அதிக விளைச்சல் மற்றும் விலை வீழ்ச்சி எதிரொலியாக ராமநாதபுரத்திற்கு கேரள அன்னாசி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம்:

கேரளாவில் அதிக விளைச்சல் மற்றும் விலை வீழ்ச்சி எதிரொலியாக ராமநாதபுரத்திற்கு கேரள அன்னாசி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.

பழங்களில் மிகவும் ருசியானது வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது அன்னாசி பழம். கோடைவெயில் காலம் மட்டுமின்றி அனைத்து சீதோஷ்ண நிலையிலும் அன்னாசி அனைவரும் விரும்பி உண்ணும் பழமாகும். இந்த அன்னாசி பழமானது மழையை மட்டும் நம்பி வளரும் மானாவாரி பயிராகும். இதன் வளர்ச்சிக்கு வெப்பமும், நிழலும் சரிசமமாக இருக்க வேண்டும்.
ஆயுட்காலம் ஓராண்டு என்றாலும் ஏராளமான பழங்களை அள்ளித்தந்து விட்டுதான் மடியும். கேரளா மாநிலத்திலும் தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியிலும் இந்த அன்னாசி பழங்கள் அதிகஅளவில் விளைந்து வருகின்றன. இந்த பழங்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பொதுவாக மார்ச் மாதம் தொடக்கத்தில் அன்னாசி விற்பனை தொடங்கும். ஜூன் மாத இறுதி வரை இதன் வரத்து அதிகஅளவில் இருக்கும். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்னாசி பழங்கள் விற்பனை சமீப காலமாக அதிகரித்து உள்ளது.

ரமலான் நோன்பு காலம் தொடங்கிய நிலையில் அதிக விற்பனையாகி வந்த அன்னாசி பழங்கள் தற்போதும் சூடுபிடித்து உள்ளன. இதற்காக கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான அன்னாசி பழங்கள் ராமநாதபுரத்திற்கு மினி சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி கூவி கூவி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அன்னாசி வியாபாரி நாகர்கோவில் கோபு கூறியதாவது:-

ஆண்டுதோறும் சீசன் காலங்களில் அன்னாசி விற்பனை செய்வது வழக்கம். தற்போது கேரளாவில் அதிக மழை காரணமாகவும் அங்கு விற்பனை குறைந்துவிட்டதாலும் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. மேலும், தமிழகத்தில் ரமலான் நோன்பு காலத்தில் அதிகஅளவில் அன்னாசி உள்ளிட்ட பழங்கள் விற்பனையானது. தற்போது அதன் விற்பனை குறைந்துவிட்டது.

இதன் காரணமாக கடந்த மாதம் ரூ.45 வரை விற்பனையான ஒரு கிலோ அன்னாசி தற்போது ரூ.25 வரை மட்டுமே விலை போகிறது. இன்னும் விலை குறையும் நிலை உள்ளது. அதிக வரத்து காரணமாக இந்த அன்னாசி பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமநாதபுரத்திற்கு வந்து குவிந்துள்ள கேரள மாநில அன்னாசி பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Tags:    

Similar News