தமிழ்நாடு
அரசு பள்ளியில் மாணவர்கள் டெஸ்க், பெஞ்சுகளை அடித்து உடைத்த காட்சி

மேஜையை உடைத்த பள்ளி மாணவர்கள் தற்காலிக நீக்கம்

Published On 2022-04-25 08:49 GMT   |   Update On 2022-04-25 08:49 GMT
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
வேலூர்:

வேலூர் தொரப்பாடி பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் மாலை வழக்கமான நேரத்தை விட ஒருமணி நேரம் முன்பாக பள்ளி விடப்பட்டது. ஆனால் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை வீட்டுக்கு செல்லும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர்.

அதன் உச்சகட்டமாக வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜை, டெஸ்க், பெஞ்சுகளை தரையில் போட்டும், காலால் எட்டி உடைத்தனர். இதைக்கண்ட ஆசிரியர்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் போலீசார் பள்ளி வளாகத்துக்குள் வந்தனர்.

இதைக்கண்ட பிளஸ்-2 மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பிளஸ்-2 மாணவர்கள் டெஸ்க், பெஞ்சுகளை உடைக்கும் காட்சிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் 10 மாணவர்களை மே 4ந்தேதி வரை இடைநீக்கம்  செய்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், மாணவர்கள் ஒழுங்கீனமான  செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் மாணவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.



Tags:    

Similar News