தமிழ்நாடு செய்திகள்
வட்டக்கானல் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் தொடர் மழையால் வட்டக்கானல் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2022-04-18 10:53 IST   |   Update On 2022-04-18 10:53:00 IST
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

முக்கிய சுற்றுலா இடங்களான கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், குணாகுகை, மோயர்பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டது.

மேலும் பிரையண்ட் பூங்காவில் மலர்களின் அழகை கண்டுரசித்த பொதுமக்கள், நட்சத்திர ஏரியிலும் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்ததால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலாப்பயணிகள் புகார் தெரிவித்தனர்.

வார இறுதி நாட்களில் அதிக அளவில் குவியும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காரணமாக ஏற்படும் வாகன நெரிசலை குறைப்பதற்காக போலீசார் அதிக அளவில் பணி அமர்த்தப்பட வேண்டும் என்றும், சுற்றுலா இடங்களில் கூடுதல் கார் நிறுத்த வசதிகள் செய்ய வேண்டும் என்றும் சுற்றுலாப்பயணிகளின் அடிப்படை தேவைகளான கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குறிப்பாக வட்டக்கானல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப்பயணிகள் கால்களை நனைத்தபடி உற்சாகமாக மகிழ்ந்தனர். மேலும் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கோடைகாலம் தொடங்கிய நிலையில் மழை பெய்து வருவதால் இதமான சீதோ‌ஷண நிலை காணப்படுகிறது. இதனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

நேற்று மாலை விடுமுறை முடிந்து அதிக அளவு வாகனங்கள் ஊர் திரும்பியதால் கொடைக்கானலில் மட்டுமல்லாது வத்தலக்குண்டு, செம்பட்டி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று அணிவகுத்து சென்றது.

Similar News